தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அரசியல் களத்தில் முழுமையாகக் கால்பதித்துள்ள நிலையில், அவரது திரைப்பயணம் மற்றும் கட்சி நிர்வாகம் சார்ந்த விவகாரங்களில் அடுத்தடுத்த சிக்கல்கள் முளைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

அதாவது விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’, கடந்த ஜனவரி 9-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக வேண்டியிருந்தது. ஆனால், தணிக்கைச் சான்றிதழ் (Censor Certificate) கிடைப்பதில் ஏற்பட்ட முட்டுக்கட்டையினால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. படத் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடிய நிலையில், தற்போது படம் மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டாலும், அதிகாரப்பூர்வ தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் ‘சஸ்பென்ஸ்’ நீடிக்கிறது.

மறுபுறம், கரூர் மாநாட்டில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை தீவிரமடைந்துள்ளது. இது தொடர்பாக விஜய் மற்றும் முக்கிய நிர்வாகிகள் டெல்லி சென்று சி.பி.ஐ. முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர். இந்த வழக்கின் இறுதி அறிக்கை இன்னும் வெளியாகாதது கட்சிக்கு ஒருவித நிழல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், த.வெ.க-வின் தேர்தல் பரப்புரை மற்றும் வியூகப் பணிகளுக்காகச் சென்னை தேனாம்பேட்டையில் இயங்கி வரும் ‘வாய்ஸ் ஆப் காமன்ஸ்’ (Voice of Commons) அலுவலகத்திற்குப் புதிய சிக்கல் எழுந்துள்ளது.

கட்சியின் மேலாண்மைக் குழு செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் மாமனாரான ‘லாட்டரி’ மார்ட்டினுக்குச் சொந்தமான கட்டிடத்தில் இந்த அலுவலகம் இயங்கி வருகிறது.

முறையாக அனுமதி பெற்றே இந்த அலுவலகம் செயல்பட்டு வந்த நிலையில், திடீரென அந்த இடத்தைக் காலி செய்யுமாறு கட்டிட உரிமையாளர் தரப்பில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் திடீரென அலுவலகத்தைக் காலி செய்யச் சொல்வது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆளுங்கட்சியான திமுக தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட கடுமையான அழுத்தம் காரணமாகவே, மார்ட்டின் தரப்பு இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆதவ் அர்ஜுனா தரப்பில் தேர்தல் வரை அவகாசம் கேட்கப்பட்ட போதிலும், அதனை ஏற்க கட்டிட உரிமையாளர் மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.

இதன் காரணமாக, கட்சியின் தேர்தல் வியூகங்களை வகுப்பதற்கான புதிய இடத்தைத் தேடும் பணியில் த.வெ.க. நிர்வாகிகள் தற்போது மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அடுத்தடுத்த இந்தச் சோதனைகளைத் தாண்டி விஜய் தனது அரசியல் பயணத்தை எப்படி முன்னெடுக்கப் போகிறார் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பு.