வரும் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் படுதோல்வியைச் சந்திக்கும்; அதன் பிறகு அரசியலும் வேண்டாம், சினிமாவும் வேண்டாம் என விஜய் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வார்” என அவரது முன்னாள் மேலாளரும், தற்போதைய திமுக நிர்வாகியுமான பி.டி. செல்வகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சுமார் 27 ஆண்டுகளாக நடிகர் விஜய்யின் மேலாளராகவும், மக்கள் தொடர்பு அதிகாரியாகவும் (PRO) பணியாற்றியவர் பி.டி. செல்வகுமார். ‘புலி’ படத்தின் தயாரிப்பாளரான இவர், விஜய்யிடமிருந்து விலகி ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நடத்தி வந்தார். சமீபத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த இவருக்கு, அக்கட்சியின் மாநில வர்த்தகர் அணி துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அவர் திமுகவில் இணைந்தது முதலே தொடர்ந்து விஜயை விமர்சித்து வரும் நிலையில் நேற்று  செய்தியாளர்களைச் சந்தித்த பி.டி. செல்வகுமார் மீண்டும் விஜயை கடுமையாக விமர்சித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக தலைமை உத்தரவிட்டால் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுவேன். விஜய் எந்தத் தொகுதியில் யாரை நிறுத்தினாலும், அவர்களுக்கு எதிராகக் களம் இறங்கிப் பணியாற்றுவேன்.

ஏழை ரசிகர்களுக்கு விஜய் செய்த துரோகத்தைத் தோலுரித்துக் காட்டுவேன். பாலாபிஷேகம், கட்-அவுட் என ரசிகர்கள் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்துள்ளனர். அவர்களுக்கு வருமானம் தரக்கூடிய எந்த முயற்சியையும் விஜய் எடுக்கவில்லை.

கப்பல் கவிழ்ந்தால் பயணிகளைக் காப்பாற்றிவிட்டுத் தன் உயிரைத் துறப்பவரே உண்மையான கேப்டன். ஆனால், கரூரில் தன்னைத் தேடி வந்து உயிரிழந்த ரசிகர்களைக் கண்டு அஞ்சாமல் அங்கிருந்து தப்பிச் சென்றவர் விஜய்.

தமிழக வெற்றிக் கழகத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் போன்ற ‘போலி அரசியல்வாதிகள்’ அடைக்கலம் புகுந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், “ஊழல் புகாரில் சிக்கியவர்கள் மக்களுக்கு நல்லது செய்ய வரவில்லை; ஓய்வெடுப்பதற்கான இடமாகவே த.வெ.க-வை நினைக்கிறார்கள்” என்று சாடினார்.

இறுதியாக, “விஜய்யின் அரசியல் வருகை இளைஞர்களுக்குப் பெரும் ஆபத்து. தேர்தலில் தோல்வியடைந்து எதிர்காலமே கேள்விக்குறியாகும் நிலைக்குத் தள்ளப்படுவார். அதன் பிறகு இந்தியாவி்ல் இருக்க மாட்டார், வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிடுவார்” எனத் தனது பேட்டியில் பி.டி. செல்வகுமார் தெரிவித்தார். எனவே இளைஞர்கள் விஜயை நம்பி பணத்தை செலவு செய்ய வேண்டாம் எனவும் கூறினார்..

மேலும் விஜய்யுடன் நீண்ட காலம் பயணித்த ஒருவரே இவ்வாறு பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருப்பது தமிழக அரசியல் மற்றும் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.