தமிழக அரசின் மதுக் கொள்கை மற்றும் போதைப்பொருள் புழக்கத்தைக் கண்டித்து, கன்னியாகுமரியில் பாரதிய ஜனதா கட்சியினர் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் மாநில அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த போஸ்டர்கள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன. ‘திராவிட மாடல்’ ஆட்சியில் மது விற்பனையால் ஏற்படும் சமூகப் பாதிப்புகளை மையமாக வைத்து இந்த போஸ்டர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, “தாலி அறுக்கும் டாஸ்மாக் கதாநாயகர்களை வீட்டுக்கு அனுப்புவோம்” என்ற வாசகம் அதில் பெரிய எழுத்துக்களில் அச்சிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்.பி. ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பது திமுகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சமீபகாலமாக அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கம் மற்றும் மதுவினால் ஏற்படும் உயிரிழப்புகளைச் சுட்டிக்காட்டி, ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்தப் போஸ்டர் பிரச்சாரத்தைக் கையில் எடுத்துள்ளதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவிலின் முக்கியச் சந்திப்புகள் மற்றும் அரசு அலுவலகச் சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களால் அப்பகுதியில் அரசியல் பதற்றம் நிலவி வருகிறது. காவல்துறையினர் இது குறித்துக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
