திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கிரேன் மூலம் மாலை அணிவித்து, கத்தியைக் காட்டி அச்சுறுத்தியதாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட த.வெ.க. செயலாளராக உதயகுமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், வந்தவாசியில் உள்ள ஐந்து கண் பாலம் அருகே நடைபெற்ற ஒரு விழாவில் பங்கேற்க அவர் வருகை தந்தார். அப்போது, அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் திடீரென மாபெரும் கிரேன் ஒன்றைக் கொண்டு வந்து, அதன் மூலம் மாவட்டச் செயலாளர் உதயகுமாருக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
இந்தச் செயலால் அந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மேலும், கட்சி நிர்வாகிகள் ஏராளமான இருசக்கர வாகனங்களில் அதிவேகமாகச் சென்றும், அதிக சத்தத்துடன் ‘ஹாரன்’ அடித்தும் பொதுமக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தினர்.
வரவேற்பு நிகழ்ச்சியின் போது, மாவட்டச் செயலாளர் உதயகுமார் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும் கத்தியைக் காட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீஸார், த.வெ.க. நிர்வாகிகளைத் தடுத்த போது, இரு தரப்பிற்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவியது. போலீஸாரின் தடையையும் மீறி நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனுமதியின்றி ஊர்வலம் சென்றது, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தது மற்றும் அச்சுறுத்தல் விடுத்தது ஆகிய புகார்களின் அடிப்படையில், த.வெ.க. மாவட்டச் செயலாளர் உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் மீது வந்தவாசி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், விதிகளை மீறி மாலை அணிவிக்கப் பயன்படுத்தப்பட்ட கிரேனையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
அரசியல் களத்தில் அமைதியான பாதையை முன்னெடுப்பதாக அக்கட்சியின் தலைமை கூறி வரும் நிலையில், மாவட்ட நிர்வாகிகளின் இத்தகைய ‘அலப்பறை’ அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
