கரூர் துயரச் சம்பவத்தை அடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நடிகரும், தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜயை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், விஜய் பேச மறுத்துவிட்டதாக அவரது குழு எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது. விஜயின் தந்தை சந்திரசேகரன் மற்றும் சினிமா உலகில் சிலரின் மூலமாகவும், அமித்ஷாவின் அலுவலகம் தொடர்புகொள்ள முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. மேலும், தவெக முக்கிய நிர்வாகிகளுடனும் தொடர்பு கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் தற்போதைய மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியுடன் விஜய் நேரடியாக பேசியதாகவும் அறியப்படுகிறது. பாஜகவை கருத்தியல் அடிப்படையில் எதிர்க்கட்சியாகவே பார்க்கிறோம் என விஜயின் குழு தெரிவித்துள்ளது. இதன் மூலம், விஜய் தனது அரசியல் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், விஜய் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த மாநில சுற்றுப்பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தவெக அறிவித்துள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு பொதுக்கூட்டங்கள் நடைபெறாது என்றும், புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதேவேளை, கரூர் கூட்டத்துடன் தொடர்பான முழு வீடியோ காட்சிகளை சமர்ப்பிக்க வேண்டும் என தவெக இணைச் செயலாளர் நிர்மல் குமாருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியிருப்பதும் கவனத்துக்கு வந்துள்ளது.
