சில நாட்களுக்கு முன்பாக, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய அளவிலான வியூக வகுப்பாளரும், தரவு பகுப்பாய்வு பிரிவின் தலைவருமான பிரவீண் சக்கரவர்த்தி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைச் சந்தித்துப் பேசியது, அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஏற்கனவே திமுக கூட்டணியில் காங்கிரஸ் உறுதியாக இருக்கும் நிலையில், அகில இந்திய அளவில் பொறுப்பில் உள்ள பிரவீண் சக்கரவர்த்தி விஜய்யைச் சந்தித்தது, ‘காங்கிரஸ் கூட்டணி மாறுகிறதா?’ என்ற கேள்வியை எழுப்பியது. இந்தச் சர்ச்சை குறித்து ஒரு தனியார் இணையதளத்திற்குப் பேட்டி அளித்த பிரவீண் சக்கரவர்த்தி, தாம் விஜய்யைச் சந்தித்ததில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்றும், தமக்குத் தவெக-வில் இணையும் எண்ணம் கொஞ்சமும் இல்லை என்றும் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்தார்.
தமது இந்தச் சந்திப்பால் திமுக கூட்டணியில் எந்தக் குழப்பமும் ஏற்படப் போவதில்லை என்றும், கூட்டணிக் குழப்பம் ஏற்பட்டதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் யாராவது கூறினார்களா என்றும் அவர் கேள்வியெழுப்பினார். எனினும், அரசியல் வட்டாரத்தில், காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைப்பதற்காக திமுக கூட்டணியில் ஒரு சலசலப்பை ஏற்படுத்துவதற்காகக் காய் நகர்த்தப்படும் ‘மாற்று ஏற்பாடு’ இது என்றும் பேசப்படுகிறது.
2021 சட்டமன்றத் தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், இந்த முறை 40 தொகுதிகள் வரை கேட்பதற்குத் திட்டமிட்டுள்ளது. இந்தச் சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, இன்னும் சில வாரங்களில் ராகுல் காந்தி அல்லது பிரியங்கா காந்தி போன்ற அகில இந்தியத் தலைவர்கள் தமிழகம் வந்து கூட்டணியை மீண்டும் உறுதிப்படுத்துவார்கள் என்றும் காங்கிரஸ் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
