தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய ஓ. பன்னீர்செல்வம்  தலைமையிலான ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு’ மற்றும் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக ஆகிய கட்சிகளை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

இந்த முயற்சிக்குச் செயல்வடிவம் கொடுக்கும் விதமாக, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் (டிச. 7) ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று (டிச. 8) கோவையில் உள்ள அண்ணாமலை வீட்டிற்குச் சென்று, அங்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரகசிய ஆலோசனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்தத் தொடர் ஆலோசனைகளுக்குப் பிறகு, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று இரவு திடீர் பயணமாகக் கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது, அவர்கள் கூட்டணி குறித்து எடுத்த நிலைப்பாடுகள் மற்றும் அவர்களின் கோரிக்கைகள் குறித்துப் பாஜக தலைமையிடம் அண்ணாமலை எடுத்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தின் பிரதானக் கட்சிகள் அனைத்தும் தங்களது கூட்டணியை இறுதி செய்ய முயன்று வரும் வேளையில், அண்ணாமலையின் இந்த அவசர டெல்லி பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.