தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு சமீபத்தில் ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்பட்டதை அடுத்து, ஒரு இளைஞர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், தேர்தல் ஆணையத்தின் ‘ரோட் ரோலர்’ (Road Roller) சின்னமும், தவெக-வின் ‘விசில்’ சின்னமும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பதால், வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்த இளைஞர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்து, ரோட் ரோலர் சின்னத்தை ‘ஃப்ரீ சிம்பல்’ (Free Symbol) பட்டியலில் இருந்து நீக்கச் சொல்லலாம் என அவர் ஒரு யோசனையை முன்வைத்துள்ளார்.

​இதற்கு முன்னுதாரணமாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் ‘முரசு’ சின்னமும், ‘கூடை’ சின்னமும் ஒன்றுபோல இருந்தபோது ஏற்பட்ட குழப்பத்தை அந்த இளைஞர் நினைவு கூர்ந்துள்ளார். அப்போது தேமுதிக தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, தமிழகத்தில் மட்டும் ‘கூடை’ சின்னம் நீக்கப்பட்டது போலவே, இப்போது ‘ரோட் ரோலர்’ சின்னத்தையும் நீக்க முடியும் என்று அவர் அந்த வீடியோவில் விளக்கியுள்ளார். தவெக தொண்டர்கள் மத்தியில் இந்த வீடியோ தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.