விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குறித்துத் தான் பேசிய கருத்துகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா பேசிய சில கருத்துகள், வி.சி.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்த நிலையில், அவர் தனது ‘எக்ஸ்’ (X) பக்கத்தில் விரிவான விளக்கத்தைப் பதிவிட்டுள்ளார்.

“இன்றைய கூட்டத்தில் நான் சொல்ல வந்த கருத்தைச் சரியான வார்த்தைகளில் முழுமையாக வெளிப்படுத்தாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ‘ஆட்சியிலும் பங்கு… அதிகாரத்திலும் பங்கு…’ என்கிற முழக்கம் ஒடுக்கப்பட்ட மக்களின் கைகளுக்கு அதிகாரம் கிடைக்கும் வரை ஒலித்துக் கொண்டே இருக்கும். ஆனால், தி.மு.க தலைமை எனது பேச்சைத் திரித்துப் பரப்பி வருகிறது.”

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் வெறும் 20 பேர் மட்டுமே இருப்பதாக நான் கூறியதாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அது தவறானது. வி.சி.க-வுக்குள் தி.மு.க-வின் முகவர்களாகச் செயல்படும் 20 நபர்கள் குறித்துத்தான் நான் குறிப்பிட்டேன். ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகாரத்திற்கு வந்துவிடக் கூடாது என நினைக்கும் தி.மு.க-வின் திட்டப்படி, அந்தக் கட்சிக்குள் இருந்துகொண்டே தி.மு.க-வினராகச் செயல்படும் நபர்களைப் பற்றியே நான் பேசினேன்.”

அண்ணன் திருமாவளவன் மீது எனக்குக் கல்லூரி காலம் முதலே பெரும் மதிப்பும் மரியாதையும் உண்டு. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் வாழ்வையே அர்ப்பணித்து வருகிறார். வி.சி.க-வுக்குள் இருக்கும் அந்த 20 நபர்கள் கொடுக்கிற தவறான தகவல்களைக் கொண்டே எங்கள் கட்சி (த.வெ.க) மீதான விமர்சனங்கள் கட்டமைக்கப்படுகின்றன. உண்மை ஒருநாள் அண்ணன் திருமாவளவனுக்குத் தெரியவரும்.”

“வாக்கு அரசியலுக்காக வி.சி.க-வைப் பயன்படுத்தும் சூழ்ச்சியைத் தி.மு.க செய்கிறது. வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மீதே வழக்குத் தொடரப்பட்டது. வி.சி.க கொடிக்கம்பத்தைக்கூட நட முடியாத அளவுக்கு ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறை உள்ளது என்பதைத் தொண்டர்கள் அறிவார்கள்.”

எனது அரசியல் பயணத்தை எந்த நோக்கத்திற்காகத் தொடங்கினேனோ, அதிலிருந்து நான் தடம் மாறவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரம் என்ற எனது குரல் என்றும் ஒலிக்கும். தி.மு.க செய்யும் திரிப்பு அரசியலில் வி.சி.க தோழர்கள் சிக்கிவிடக் கூடாது.” இவ்வாறு ஆதவ் அர்ஜுனா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.