தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) செயல் வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் மாமல்லபுரத்தில் நேற்றுகோலாகலமாகத் தொடங்கியது. இதில் பங்கேற்றுப் பேசிய கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, த.வெ.க ஏற்கனவே ஆளுங்கட்சியின் வாக்கு வங்கியை விஞ்சிவிட்டதாகத் தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு, சுமார் 38 நாட்கள் இடைவெளிக்குப் பின் தலைவர் விஜய் இன்று மீண்டும் பொது மேடையில் தோன்றினார். மாமல்லபுரம் கூட்டத்தில் அவர் பங்கேற்றது, நீண்ட நாட்களாகக் காத்திருந்த தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இந்தக் கூட்டத்தில் நிர்வாகிகளிடையே உரையாற்றிய ஆதவ் அர்ஜுனா பேசியதாவது: “ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் சராசரியாக 350 குடும்பங்கள் மற்றும் 1,000 முதல் 1,500 வாக்குகள் உள்ளன. களத்தில் இது திமுக வீடு, இது அதிமுக வீடு என்ற அடையாளம் இருக்கலாம். ஆனால், த.வெ.க-விற்கு என்று தனியாக ஒரு வீடு இல்லையா என்று நீங்கள் நினைக்கலாம்.
உண்மையில், திமுக-வின் வீட்டிற்குள்ளும் த.வெ.க ஆதரவாளர் இருக்கிறார்; அதிமுக-வின் வீட்டிற்குள்ளும் நமது ஆதரவாளர் இருக்கிறார். தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளின் வீடுகளுக்குள்ளும் த.வெ.க-வின் ஆதரவாளர்கள் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். ஒரு குடும்பத்திற்கு ஒரு வாக்கு என்று கணக்கிட்டால் கூட, தமிழகத்தில் நமக்கு 2.25 கோடி வாக்குகள் உள்ளன. கடந்த தேர்தலில் திமுக பெற்ற மொத்த வாக்குகள் 2 கோடியே 9 லட்சம் மட்டுமே. அந்த அடிப்படையில் பார்த்தால், நாம் இப்போதே திமுக-வின் வாக்கு வங்கியைத் தாண்டிவிட்டோம்.” இவ்வாறு ஆதவ் அர்ஜுனா நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
