தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில், அக்கட்சியின் முன்னாள் எம்எல்ஏ மாதேஸ்வரன் திமுகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கல்லாநத்தம் ஊராட்சியைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுகவிலிருந்து விலகி டி.டி.வி. தினகரன் தலைமையிலான அமமுகவில் இணைந்தார்.
கடந்த 2021-ஆம் ஆண்டு தேர்தலில் அமமுக வேட்பாளராக ஆத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார். அதன் பின்னர், அமமுகவிலிருந்து விலகி மீண்டும் தாய் கழகமான அதிமுகவில் இணைந்திருந்தார்.
இந்நிலையில், அதிமுகவில் மீண்டும் அதிருப்தியில் இருந்த மாதேஸ்வரன், அக்கட்சியிலிருந்து விலகி நேற்று திமுகவில் இணைந்தார். சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் எம்.பி. முன்னிலையில் அவர் முறைப்படி தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.
அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் சேலம் மாவட்டத்திலும், குறிப்பாக எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்திலேயே முன்னாள் எம்எல்ஏ ஒருவரை திமுக தன்பக்கம் இழுத்துள்ளது அதிமுக நிர்வாகிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில் நடைபெறும் இந்த கட்சித் தாவல்கள் சேலம் மாவட்ட அரசியலில் முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது.
