அதிமுக-விலிருந்து விலகிய சி. விஜயபாஸ்கருக்கு எதிராக, முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “எம்.ஜி.ஆர், அம்மா மற்றும் எடப்பாடியார் வளர்த்த இந்த இயக்கத்தில் அதிகாரத்தையும், வாழ்வையும் பெற்றுவிட்டு, சோதனையான நேரத்தில் கட்சியைத் தரம் குறைத்துப் பேசுவது எந்த வகையில் நியாயம்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜயபாஸ்கர் கட்சிக்கு வருவதற்கு முன்பு இருந்த குடும்ப சொத்து மதிப்பு என்ன, இப்போதுள்ள சொத்து மதிப்பு எவ்வளவு என்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று சவால் விடுத்துள்ளார். “பதவியும், இரட்டை இலை சின்னமும் பெற்று வென்றதை உதறிவிட்டு, நீங்கள் கட்சிக்கு வருவதற்கு முன் இருந்த நிலையில் தானே வேறு கட்சிக்குச் செல்ல வேண்டும்? அந்தச் சொத்துக்களை எல்லாம் கட்சிக்கு எழுதி வைப்பீர்களா?” என்று ஆர்.பி. உதயகுமார் காட்டமாகக் கேள்வி கேட்டுள்ளார். தொண்டர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில், அவர் விடுத்த இந்த சவால் அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.