பாஜக கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமாறு மீண்டும் விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளார். ஏற்கனவே நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்படாத நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ வழக்கு முடுக்கி விடப்பட்டுள்ளது. இது அடுத்தடுத்து நடிகர் விஜய்க்கு சிக்கலை ஏற்படுத்தியதாக கூறப்படும் நிலையில் பாஜக தான் விஜயை தங்கள் பக்கம் இருப்பதற்காக இப்படி செய்வதாக அரசியல் கட்சிகள் பலரும் கூறி வருகிறார்கள் ‌.

நேற்று நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் தனக்கு அழுத்தம் இருப்பதாக கூறிய விஜய் ஊழல் செய்வதற்காக தான் அரசியலுக்கு வரவில்லை எனவும் ஊழல் செய்யவும் விடமாட்டேன் எனவும் கூறிய நிலையில் கண்டிப்பாக தனித்து நின்றாலும் அடுத்த தேர்தலில் நாம் தான் ஜெயிப்போம் என்று கூறினார். அதே நேரத்தில் பாஜகவை அவர் வெளிப்படையாக விமர்சிக்கவில்லை.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது, 2026 தேர்தலுக்கு நடிகர் விஜய் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தால் நிம்மதியாக அரசியல் செய்யலாம். ஒருவேளை திமுக ஆட்சிக்கு வந்தால் கரூர் சம்பவத்தை நினைவில் வைக்க வேண்டும். திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்த உடன் முதலமைச்சராவது கடினம். எனவே வெற்றி பெறும் கூட்டணிக்கு ஆதரவாக அவர் இருக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் நடிகர் விஜய் திமுகவை அரசியல் எதிரி என்றும் பாஜகவை கொள்கை எதிரி என்றும் அறிவித்த நிலையில் அவர்களுடன் எந்த காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டோம் எனக் கூறிவருகிறார். இப்படி இருக்கையில் தொடர்ந்து அவருக்கு கூட்டணிக்கு அழைப்பு வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.