இந்த ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம் மார்ச் 3-ஆம் தேதி நிகழ உள்ளது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதால் இந்த நிகழ்வு ஏற்படுகிறது. இந்த சமயத்தில் நிலவு அடர் சிவப்பு நிறத்தில் ‘ரத்த நிலவு’ போலக் காட்சியளிக்கும்.

இந்திய நேரப்படி மாலை 4:58 மணிக்குத் தொடங்கி இரவு 7:53 மணி வரை இந்த கிரகணம் நீடிக்கும். இதில் முழு கிரகண நிலை சுமார் 58 நிமிடங்கள் நீடிக்கும் என்றாலும், இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் சந்திரன் உதிக்கும் போதே கிரகணம் தொடங்கிவிடுவதால் அதன் இறுதிப் பகுதியை மட்டுமே காண முடியும்.வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் சில நகரங்களில் மட்டும் முழு சந்திர கிரகணத்தை ஓரளவிற்குத் தெளிவாகக் காண வாய்ப்புள்ளது.

குறிப்பாக மாலை 5:10 முதல் 5:25 மணி வரை கிரகணத்தின் உச்சக்கட்ட நிலையை அங்குள்ளவர்கள் ரசிக்கலாம். மற்ற பகுதிகளில் கிழக்கு அடிவானத்தில் சந்திரன் உதிக்கும் போது இந்த நிகழ்வு தாழ்வாகத் தெரியும்.

சூரிய கிரகணத்தைப் போலல்லாமல், இந்த சந்திர கிரகணத்தை எந்தவிதச் சிறப்பு கண்ணாடிகளும் இன்றி வெறும் கண்களால் பாதுகாப்பாகப் பார்க்கலாம்.