விருதுநகர் மாவட்டத்தில் கனிமங்கள் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்தனர்.

மாவட்டத்தில் உள்ள மொத்தம் 76 கல்குவாரிகளை ஆளில்லா விமானம் எனப்படும் நவீன ‘ட்ரோன்’ (Drone) தொழில்நுட்பம் மூலம் உயர பறக்கவிட்டு துல்லியமாக அளவீடு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.

இந்த நிலையில், இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே.பிரபு இன்று காலை விருதுநகர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகளுடன் அவசர கலந்தாய்வு மேற்கொண்டார்.

அப்போது ட்ரோன் மூலம் பெறப்பட்ட அறிக்கையை ஆய்வு செய்ததில், 23 கல்குவாரிகள் தங்களுக்கு அரசு அனுமதித்த எல்லையைத் தாண்டி, குத்தகை பரப்பிற்கு வெளியே சட்டவிரோதமாகக் கல் உடைத்து விதிமீறலில் ஈடுபட்டது கச்சிதமாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த 23 கல்குவாரிகளின் செயல்பாடுகளையும் உடனடியாக தற்காலிகமாக நிறுத்தி, அவற்றை இழுத்து மூட அமைச்சர் டி.கே.பிரபு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த ட்ரோன் அறிக்கையின் அடிப்படையில் விதிமீறலில் ஈடுபட்ட குவாரி உரிமையாளர்கள் மீது கடுமையான மேல்நடவடிக்கை பாயும் என்றும் அரசுத் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.