தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக படுதோல்வியடைந்து எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த நிலையில், அக்கட்சியில் நிலவி வரும் உட்கட்சிப் பூசலால் எம்.எல்.ஏ-க்கள் அடுத்தடுத்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்து விட்டு ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 எஸ்.பி.வேலுமணி தரப்பைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்) ஆகியோர் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் பதவி விலகல் கடிதங்களை அளித்து விட்டு தவெகவில் ஐக்கியமான நிலையில், இன்று காலை அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ இசக்கி சுப்பையாவும் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்துள்ளார்.

ஏற்கெனவே முதல்வர் விஜய் தான் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றதால் திருச்சி கிழக்குத் தொகுதியை ராஜினாமா செய்திருந்த நிலையில், தற்போது இந்த 4 அதிமுக எம்.எல்.ஏ-க்களின் விலகலையும் சேர்த்து தமிழகத்தில் மொத்தம் 5 சட்டமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் வரவிருக்கிறது.

இதற்கிடையே, தவெக அரசில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இந்த அரசியல் நகர்வை ஆளுங்கட்சிக்கு எதிராகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதிமுகவிலிருந்து எம்.எல்.ஏ-க்கள் விலகி தவெகவில் இணைவதை ஆரோக்கியமான அரசியலாக விசிக கருதவில்லை என்று தெரிவித்துள்ள அவர், தவெக தலைமை இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு ஊக்கம் அளிக்கக் கூடாது என்றும், பதவி விலகிவிட்டு வருபவர்களை இப்படி கட்சியில் இணைத்துக் கொள்வது தவெகவின் நம்பகத்தன்மையைக் கெடுத்து விமர்சனங்களுக்கு இடம் கொடுத்துவிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

ஆளுங்கூட்டணியில் இருந்துகொண்டே தவெக தலைமையின் இந்த நடவடிக்கையை விசிக தலைவர் பகிரங்கமாக விமர்சித்திருப்பது தற்போதைய அரசியல் சூழலில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.