திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி மகாலட்சுமி நகரைச் சேர்ந்த பார்த்திபன் (வயது 35), பழனி போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு பார்த்திபனுக்கும் வினோதினி (20) என்பவருக்கும் திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான ஒரு வாரத்திற்குள் பார்த்திபனின் நடத்தை சந்தேகத்திற்கு இடமளிப்பதாக மனைவி கவலைப்பட்டுள்ளார்.
தொடர்ந்து கண்காணித்த வினோதினி, ஒரு நாளில் பார்த்திபனின் செல்போனை எடுத்து பார்த்தபோது, அவரது வாட்ஸ்-அப் மெசேஜ்களில் பல பெண்களிடம் பேசிய தடயங்கள், மேலும் ஆபாச படங்கள் இருப்பதையும் கண்டுபிடித்தார்.
இதனை குறித்து பார்த்திபனின் குடும்பத்தினரிடம் வினோதினி புகார் தெரிவித்த நிலையில், இருபக்கத்தவர்களுக்கும் இடையில் கடும் தகராறு ஏற்பட்டது. இந்த பிரச்சனையின் தொடர்ச்சியாக, பார்த்திபனின் குடும்பத்தினர் வினோதினியை அடித்து வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, வினோதினி திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் நேரில் சென்று புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில், ஓட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பார்த்திபன் மற்றும் அவரது தாயார் கண்ணம்மாள் உட்பட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், பார்த்திபன் மீது ஏற்கனவே கன்னிவாடி பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த அடிதடி சம்பவம் தொடர்பான வழக்கில் முன்ஜாமீனில் இருப்பதால், அவர் ஒவ்வொரு நாளும் கன்னிவாடி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். இதற்கிடையே, வினோதினி அளித்த புகாரின் அடிப்படையில், ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பேபி, பார்த்திபனை நேற்று கைது செய்தார். தற்போது போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
