வாட்ஸ்அப் செயலிக்கு போட்டியாக எலான் மஸ்க்கின் ‘எக்ஸ்’ நிறுவனம் ‘எக்ஸ்சாட்’ எனும் புதிய தகவல் பரிமாற்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்களின் தனியுரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் செயலி, விளம்பரங்கள் மற்றும் பயனர்களைக் கண்காணிக்கும் முறைகள் எதுவுமின்றி இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் வசதி உள்ளதால், தகவல்களை அனுப்புபவர் மற்றும் பெறுபவரைத் தவிர வேறு யாராலும் படிக்க முடியாது. மேலும், ஒருமுறை பார்த்தவுடன் மறையும் செய்திகள் ஸ்கிரீன்ஷாட் எடுப்பதைத் தடுக்கும் வசதி மற்றும் அனுப்பிய செய்திகளைத் திருத்தும் வசதி எனப் பல்வேறு நவீன அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் தற்போது இந்தச் செயலி ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மற்றும் ஐபேட் பயனர்களுக்குக் கிடைக்கிறது. எக்ஸ் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் தொலைபேசி எண்ணைப் பகிராமலேயே இந்தப் புதிய செயலியில் இணைந்து கொள்ளலாம்.

மேலும் ஒரே குழுவில் 481 பேர் வரை உரையாடும் வசதி மற்றும் உயர்தர வீடியோ அழைப்புகள் எனப் பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ள ‘எக்ஸ்சாட்’ மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் சந்தை ஆதிக்கத்திற்குப் பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட பல சேவைகளை இதனுடன் இணைத்து, இதை ஒரு ‘சூப்பர் ஆப்’-ஆக மாற்ற எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார்.