உலகின் முன்னணி குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்அப், தனது பயனர்களின் தனியுரிமையை மேம்படுத்தும் வகையில் ‘ஸ்பாய்லர்’ என்ற புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த அப்டேட்டின் மூலம், பயனர்கள் தாங்கள் அனுப்பும் மெசேஜ்களை மறைத்து அனுப்ப முடியும்.

இவ்வாறு அனுப்பப்படும் செய்திகள் பெறுநருக்கு நேரடியாகத் தெரியாது அந்த மெசேஜின் மீது ஒருமுறை தட்டினால் மட்டுமே உள்ளே இருக்கும் விவரங்கள் வெளிப்படும். தற்போது ஐஓஎஸ் பதிப்பில் சோதனை செய்யப்பட்டு வரும் இந்த வசதி, முதற்கட்டமாக உரைச் செய்திகளுக்கு  மட்டுமே வழங்கப்பட உள்ளது.

இந்த புதிய அம்சம் தனிநபர் உரையாடல்கள் மட்டுமின்றி, குழுக்களிலும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐமெசேஜ் சேவையில் ஏற்கனவே உள்ள இந்த வசதியைப் போலவே இது செயல்படும்.

தற்போது டெக்ஸ்ட் மெசேஜ்களுக்கு மட்டும் அறிமுகமாகும் இந்த வசதி, எதிர்காலத்தில் புகைப்படங்கள் மற்றும் பிடிஎஃப் கோப்புகளையும் மறைத்து அனுப்பும் வகையில் விரிவுபடுத்தப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. சமூக வலைத்தளங்களுக்கிடையேயான போட்டியைச் சமாளிக்கவும், பயனர்களுக்குப் புதிய அனுபவத்தைத் தரவும் வாட்ஸ்அப் இந்த அதிரடி மாற்றத்தைக் கொண்டு வருகிறது.