உணவுப் பிரியர்களைக் கவர உணவகங்கள் விதவிதமான கருப்பொருள்களைப் பின்பற்றி வருகின்றன. முழு இருட்டிலும், வானத்தில் தொங்கியபடியும் உணவு பரிமாறப்பட்ட நிலையில், தற்போது அமெரிக்காவில் உள்ள ‘கிளாஸ் சோயரி ஸ்டீக்ஹவுஸ்’ என்ற உணவகம், ‘முன்பின் தெரியாத நபர்களுடன் நிர்வாணமாக உணவருந்தும்’ புதுமையான அனுபவத்தை வழங்கி வருகிறது.
ஒவ்வொரு மாதமும் முதல் திங்கட்கிழமையன்று நடைபெறும் இந்த இரவு விருந்தில், சுமார் 15 முதல் 20 விருந்தினர்கள் வரை கலந்துகொள்கிறார்கள். இதில் ஆபாசமோ அல்லது தவறான நோக்கமோ எதுவுமில்லை என்றும், இது முற்றிலும் ஒரு வித்தியாசமான உணவு அனுபவம் மட்டுமே என்றும் உணவக நிர்வாகம் தெளிவுபடுத்துகிறது. உணவகம் முழுமையாக மூடப்பட்டு, வாடிக்கையாளர்களின் தனிமை பாதுகாக்கப்படுவதோடு, பணியாளர்கள் மட்டுமே முழு ஆடையுடன் பணியாற்றுகின்றனர்.
உணவகத்திற்குள் நுழையும் வாடிக்கையாளர்களுக்குச் சுகாதாரம் பேணும் வகையில் பிரத்யேகத் துண்டுகள் வழங்கப்படுகின்றன. உடனடியாக ஆடைகளைக் களைய வேண்டிய கட்டாயம் இல்லை; வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான வேகத்தில் ஆடைகளை மாற்றிக் கொள்ளலாம். மேலும், இந்த அனுபவத்தில் பங்கேற்கத் தனியாக வரும் பெண்களுக்குச் சுமார் ரூ.14,300, ஆண்களுக்கு ரூ.23,842 மற்றும் தம்பதிகளுக்கு ரூ.28,575 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
உணவகத்தின் உரிமையாளரும் சமையல் கலைஞருமான மௌராத் அலி கூறுகையில், “இதுபோன்ற மாறுபட்ட உணவு அனுபவங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது; இங்கு வரும் விருந்தினர்கள் பாதுகாப்பாகவும் மரியாதையுடனும் உணரத் தேவையான அனைத்துப் பயிற்சிகளும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன” என்கிறார். மேலும், ஐந்து வகையான சுவையான உணவுகளுடன் இந்த சிறப்பு விருந்து பரிமாறப்படுகிறது.
உடலைப் பற்றிய கூச்சத்தைப் போக்கவும், தன்னம்பிக்கையை வளர்க்கவும், ஆடை குறித்த சமூகப் பொதுப்புத்திகளை உடைக்கவுமே இந்த ‘இயற்கைவாதம்’ சார்ந்த உணவு முறை ஊக்குவிக்கப்படுகிறது. நாகரிக உலகம் ஆடைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இந்த காலத்தில், ‘என்ன ஆடை அணிவது?’ என்ற கவலையே இல்லாமல் உணவருந்தும் இந்த விசித்திரப் பழக்கம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
