மதுரை மாவட்டம் மேலூரில், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற்றது. ‘போதையில்லா மேலூர்’ மற்றும் ‘பெண்கள் பாதுகாப்பு’ ஆகிய உன்னத நோக்கங்களை வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த ஓட்டப்பந்தயம், மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து தொடங்கி 4 பிரிவுகளாக மொத்தம் 4 கிலோமீட்டர் தூரம் வரை நடைபெற்றது. இந்நிகழ்வை தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் கொடியசைத்து முறைப்படி தொடங்கி வைத்தார்.

முன்னதாக, விழா மேடைக்கு அமைச்சர் வந்தபோது, அங்கு சினிமா பாடலுக்கு இளைஞர்கள் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தனர். அதைப்பார்த்த அமைச்சர் விஸ்வநாதன், தனது பதவியைக் கடந்து அங்கிருந்தவர்களோடு இணைந்து மேடையிலேயே துள்ளலாக நடனமாடினார். குறிப்பாக, அவர் பெண்ணுடன் நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “முதலமைச்சரின் பிறந்தநாள் விழாவை நாங்கள் குதூகலமாகக் கொண்டாடினோம், இதில் என்ன தவறு இருக்கிறது? அங்கிருந்த இளைஞர்கள் விடுத்த அன்பான கோரிக்கைக்கு மதிப்பளித்துதான் அவர்களோடு சேர்ந்து ஆடினேன்” என அமைச்சர் விஸ்வநாதன் மிகவும் எதார்த்தமாகப் பதிலளித்துள்ளார்.