ஹைதராபாத்தில் நவாஸ் என்ற நபர், தன்னை ஒரு இந்துவாகக் காட்டி ஏமாற்றி ஒரு பெண்ணைத் திருமணம் செய்து, அவரை வலுக்கட்டாயமாக மதம் மாற்றிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு அந்தப் பெண்ணிடம் கடை வாடகைக்கு எடுப்பது போல அறிமுகமான நவாஸ், தான் இந்து மதத்திற்கு மாறிவிட்டதாகக் கூறி ஆசை வார்த்தைகளைச் சொல்லியுள்ளார்.

திருமணத்திற்கு முன்பே அந்தப் பெண்ணிற்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்ததோடு, ஆபாசப் புகைப்படங்களை எடுத்து மிரட்டி 2025-ல் திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு அந்தப் பெண்ணை இஸ்லாம் மதத்திற்கு மாறச் சொல்லி வற்புறுத்தியதுடன், ‘நசீரா’ எனப் பெயரையும் மாற்றியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட அந்தப் பெண் சைவ உணவுப் பழக்கம் கொண்டவர் என்றாலும், அவரை வலுக்கட்டாயமாக மாட்டிறைச்சி சாப்பிட வைத்துத் துன்புறுத்தியுள்ளனர். மேலும், அவரது பெயரில் பல லட்ச ரூபாய் கடன் வாங்கியும், நிலத்தை விற்றும் சுமார் 30 லட்சம் ரூபாய் வரை நவாஸின் குடும்பத்தினர் மோசடி செய்துள்ளனர்.

அந்தப் பெண்ணை அடிக்கடி அடித்துத் துன்புறுத்தியதுடன், கட்டாயக் கருக்கலைப்பும் செய்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினரிடம் முறையிட்டும் அவர்கள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார். இந்தச் சம்பவம் ஹைதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.