குஜராத் மாநிலத்தில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், கணவனை மனைவியே கல்லால் அடித்துக் கொன்றுவிட்டு, இரவு முழுவதும் சடலத்தின் அருகிலேயே அமர்ந்திருந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. நர்மதா மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியினர் மாலை நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது, அவர்களுக்குள் திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதத்தின் போது கணவர் மனைவியின் கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மனைவி, ஆவேசத்தில் அருகில் கிடந்த ஒரு கல்லை எடுத்து கணவரின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் தனது கணவர் இறந்துவிட்டதை உறுதி செய்த அந்தப் பெண், பயத்தில் அங்கிருந்து ஓடிவிடாமல், உயிரிழந்த கணவரின் உடல் அருகிலேயே இரவு முழுவதும் அமர்ந்திருந்துள்ளார். விடிந்த பிறகு அவரே இது குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பெண்ணைக் கைது செய்து கணவரின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சாதாரண வாக்குவாதம் கொலையில் முடிந்ததா அல்லது இதற்குப் பின்னால் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.