பீகார் மாநிலத்தின் பொது சுகாதாரக் கட்டமைப்பு மிக மோசமான நிலையில் உள்ளதைச் சுட்டிக்காட்டி, அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத காரணத்தால், நோயாளிகளை சக்கர நாற்காலிகளில் அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, ஸ்கூட்டர்களிலும், மிதிவண்டிகளிலும், சில நேரங்களில் கட்டில்களிலேயே சுமந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருந்துகள் இல்லாதது மட்டுமல்லாமல், அத்தியாவசியத் தேவையான பஞ்சு மற்றும் ஊசிகளுக்குக் கூட தட்டுப்பாடு நிலவுவதை அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார். வெறும் செங்கல் மற்றும் சிமெண்டால் கட்டிடங்களை எழுப்பி அவற்றுக்கு மருத்துவக் கல்லூரிகள் எனப் பெயரிடுவதால் மட்டும் சுகாதாரச் சேவை மேம்பட்டுவிடாது என அவர் சாடியுள்ளார்.

இந்நிலையில் போதிய மருத்துவப் பணியாளர்களை நியமிக்காமல் வெறும் கட்டிடங்களை மட்டும் உருவாக்குவது முறையற்றது என்றும், இத்தகைய கட்டிடங்கள் தரகுப் பணத்திற்காக மட்டுமே கட்டப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். முறையான சிகிச்சை ஏற்பாடுகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் இல்லாத இக்கட்டிடங்கள், நோயாளிகளுக்குப் பயன்படாமல் வெறும் புறாக்கள் வசிக்கும் கூடாரமாகவே மாறும் என்றும் அவர் தனது பதிவில் எச்சரித்துள்ளார்.