உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கழுத்தறுத்துக் கொலை செய்துவிட்டு, அதனை இயற்கை மரணம் என நம்ப வைக்க முயன்ற மனைவியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதாவது 52 வயதான கொத்தனார் ஆஷிஷ் குமார் சர்மா, கடந்த ஏப்ரல் 1 மற்றும் 2-ஆம் தேதிக்கு இடைப்பட்ட இரவில் தனது வாடகை வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். ஆரம்பத்தில் இது ஒரு சாதாரண மரணம் என்று காட்ட முயன்றனர். ஆனால், உயிரிழந்தவரின் மகனுக்குத் தந்தையின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டது. அவரது புகாரின் பேரில் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

பிரேதப் பரிசோதனை அறிக்கையில், ஆஷிஷ் குமார் சர்மா மாரடைப்பால் இறக்கவில்லை என்பதும், அவர் கழுத்து நெரிக்கப்பட்டு  கொலை செய்யப்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவரின் மைத்துனர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

சம்பவம் நடந்த பகுதியைச் சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, அன்றிரவு ஆஷிஷ் குமாரின் மனைவி ஆர்த்தி சர்மா, மற்றொரு நபருடன் வீட்டிற்குள் செல்வதும், பின்னர் இருவரும் வெளியே வருவதும் பதிவாகியிருந்தது. காவல்துறையினரின் விசாரணையில், ஆர்த்திக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் சப்லு கான் என்பவருக்கும் இடையே தகாத  உறவு இருந்தது தெரியவந்தது.

கணவர் ஆஷிஷ் குமார் தனது மனைவியின் கள்ளக்காதலை வன்மையாகக் கண்டித்து வந்ததால், வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஆர்த்தி, தனது கள்ளக்காதலன் சப்லு கானுடன் சேர்ந்து கணவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டார். இதன்படி, நள்ளிரவில் இருவரும் சேர்ந்து ஆஷிஷ் குமாரைக் கழுத்தை நெரித்துக் கொன்றனர். மேலும்  தலைமறைவாக இருந்த ஆர்த்தி சர்மாவை  காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பியோடிய அவரது கள்ளக்காதலன் சப்லு கானை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.