சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் காமராஜபுரம் நேதாஜி தெருவில் வசிப்பவர் சீதாலட்சுமி. இவரிடம் இரண்டு பவுன் சங்கிலியும் ,கிழக்கு தாம்பரம் ஆஞ்சநேயர் தெருவில் நித்திய சுபா என்பவரிடம் ஐந்து பவுன் சங்கிலியையும் மோட்டார் சைக்கிள் வந்த வாலிபர் பறித்து சென்றுள்ளார். இது குறித்து அவர்கள் புகார் அளித்த நிலையில் போலீசார் நடத்தி விசாரணையில் 2 பெண்களிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது கோவில்பட்டியைச் சேர்ந்த அருணாச்சலம்(27) என்பதும், தற்போது அவர் சென்னை அடுத்த மடிப்பாக்கம் பகுதியில் குடும்பத்தோடு சொந்த வீட்டில் வசித்து வருகிறார் என்பதும் தெரியவந்தது.
இந்த நிலையில் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அவர் சிவில் இன்ஜினியரிங் படித்து முடித்து சரியான வேலை கிடைக்காததால் ஆன்லைன் வர்த்தகத்தில் கவனம் செலுத்தியுள்ளார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் தங்கையின் திருமணத்திற்கு வைத்திருந்த நகை மற்றும் பலரிடம் கடன் வாங்கியது என்று 15 லட்ச ரூபாய் வரை ஆன்லைன் வர்த்தகத்தில் இழந்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கடனாளியாக இருந்த அவர் youtube இல் பார்த்து சங்கிலி பறிப்பில் ஈடுபட முடிவு செய்தார். அதன்படி தனியாக செல்பவர்களின் நோட்டமிட்டு சீதாலட்சுமி,நித்திய சுபா இருவரிடமும் சங்கிலி பறித்தது தெரியவந்தது. வருகிற பத்தாம் தேதி இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து போலீசார் இவரை சிறையில் அடைத்துள்ளனர்.
