அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 2025-ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது உலக அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 2025-ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜனவரி 15, 2026 அன்று வெள்ளை மாளிகையில் டிரம்பைச் சந்தித்த மச்சாடோ, தனக்கு வழங்கப்பட்ட அந்த நோபல் பரிசு பதக்கத்தை டிரம்பிற்குப் பரிசாக வழங்கினார். வெனிசுலாவில் ஜனநாயகம் மலர டிரம்ப் மேற்கொண்ட உறுதியான நடவடிக்கைகளைப் பாராட்டும் விதமாக, இந்தச் செயலை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக மச்சாடோ முன்னிறுத்தினார்.

இந்தச் சந்திப்பிற்குப் பிறகு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட டிரம்ப், “மரியா தனது நோபல் பரிசை எனக்கு வழங்கியது பரஸ்பர மரியாதையின் வெளிப்பாடு” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், நோபல் பரிசு விதிகள் இதற்கு முரணாக உள்ளன.

மேலும் நோபல் பரிசை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாற்றவோ அல்லது பகிர்ந்து கொள்ளவோ சட்டப்பூர்வமாக இடமில்லை என்று நார்வே நோபல் கமிட்டி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. பதக்கத்தை டிரம்ப் ஒரு பரிசாக வைத்துக்கொள்ள முடியுமே தவிர, அதிகாரப்பூர்வமாக அந்த விருது மச்சாடோவுக்கே சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.