இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் தலைமையில் செயல்படும் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் ‘வந்தாரா’ விலங்கு மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம், குஜராத்தின் ஜாம்நகரில் 3000 ஏக்கர் பரப்பளவில் இயங்கி வருகிறது.

உலகின் மிகப்பெரிய தனியார் உயிரியல் பூங்காவாகக் கருதப்படும் இந்த மையத்தை 2024-ல் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்திருந்தார். சிங்கங்கள், யானைகள், காண்டாமிருகங்கள் உள்ளிட்ட 43 இனங்களைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட விலங்குகள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இதைத் தொடர்ந்து, இங்கு உள்ள யானைகள் சட்டவிரோதமாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து கடத்தி கொண்டு வரப்பட்டதாக விலங்குகள் நல அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு எழுப்பினர். வழக்கறிஞர் சி.ஆர். ஜெயா சுகின் தாக்கல் செய்த பொதுநல மனுவை நேற்று நீதிபதிகள் பங்கஜ் மிதல் மற்றும் பிரசன்னா பி. வரலே விசாரித்தனர்.

விசாரணையின் பின்னணியில், ஓய்வுபெற்ற நீதிபதி ஜே. செல்லமேஸ்வர் தலைமையில் ஒரு சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த குழு, வந்தாரா மையத்தில் யானைகள் உள்ளிட்ட விலங்குகள் தொடர்பான சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, செப்டம்பர் 12-ஆம் தேதிக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.