தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தனது பிரசாரப் பயணத்தை இன்று திருச்சியில் தொடங்கினார். இதற்காக இன்று காலை திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்த விஜய், அங்கிருந்து பிரசார வேனில் மரக்கடை நோக்கி புறப்பட்டார்.

மரக்கடை பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே பிரசாரம் தொடங்கவிருந்த நிலையில், விஜயை நேரில் காணும் நோக்குடன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அங்கு திரண்டிருந்தனர். இதன் காரணமாக, காலை 10.30 மணிக்கு பிரசார வேன் வரவிருந்தாலும், பரபரப்பான கூட்டம் காரணமாக அது தாமதமானது. ஏராளமான தொண்டர்கள் கூட்டத்தில் தத்தளிக்கின்ற நிலையில் முன்னேறி வருகின்றனர்.

இந்த நிலையில், விஜயின் பிரசாரம் மற்றும் திரண்டுள்ள தொண்டர்கள் கூட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், விஜயின் அரசியல் முன்னேற்றம் குறித்து விமர்சனமாக கருத்து தெரிவித்தார். “தற்போதுவரை விஜய் தலைமையில் எந்த கூட்டணியும் உருவாகவில்லை. தனித்து செயல்படுகிறார். திமுக தலைமையிலான கூட்டணியை வீழ்த்தும் அளவிற்கு அவர் அரசியல் பலம் பெறவில்லை.  வடிவேலு ஷோ நடத்தினாலும் கூட இப்படி கூட்டம் கூடும்,” எனக் கூறினார் திருமாவளவன்.