இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளியில், ஒரு நபர் தனது குழந்தையை காரின் டாஷ்போர்டில் படுக்கவைத்து கார் ஓட்டுவதைப் பதிவு செய்திருந்தார். இதைப் பார்த்த ஒரு குழந்தைகள் மருத்துவர் அதிர்ச்சியடைந்து, இது குழந்தையின் உயிருக்கு ஆபத்தான செயல் என்று கூறி ஒரு பதில் காணொளி வெளியிட்டார். அவர், லைக்ஸ் பெறுவதற்காக குழந்தையின் பாதுகாப்புடன் விளையாடுவது தவறு என்று ஆதங்கப்பட்டார். மேலும், 12 வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகளை காரின் முன் இருக்கையில் அமரவைக்கக் கூடாது என்று வலியுறுத்தினார்.
அந்த மருத்துவர், குழந்தைகளை காரில் பயணிக்கும்போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிகளையும் விளக்கினார். குழந்தைகளுக்கு ஏற்ற கார் இருக்கை பயன்படுத்துவது, அவர்களை பின்புற இருக்கையில் அமரவைப்பது, சீட் பெல்ட் அணிவிப்பது ஆகியவை முக்கியம் என்று கூறினார். இந்தக் காணொளி இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
