பெங்களூரு நகரின் வசரஹள்ளி பகுதியில் நடந்துள்ள ஒரு பெரும் சோக சம்பவம் அப்பகுதியையே உலுக்கியுள்ளது. நீண்ட வருடக் காத்திருப்புக்குப் பிறகு பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் பறிிகொடுத்த ஒரு தாயின் சோகப் பின்னணி தற்போது வெளியாகியுள்ளது.

ராமலிங்கப்பா – உமா தேவி தம்பதியினர் கடந்த 2002-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு நீண்ட காலமாக குழந்தைகள் இல்லை. இதனால் மனம் தளராமல் மருத்துவ உதவியை நாடிய அவர்கள், ஐ.வி.எஃப் (IVF) சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தனர். இந்த சிகிச்சையின் பலனாக, கடந்த மே 5-ம் தேதி உமா தேவிக்கு அழகான இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. வீட்டில் நீண்ட நாட்களுக்குப் பிறகு குழந்தைகளின் பிஞ்சுச் சிரிப்பு ஒலிக்கத் தொடங்கியது.

ஆனால், இந்த மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. குழந்தைகள் பிறந்து சுமார் ஒன்றரை மாதங்கள் கடந்த நிலையில், உமா தேவியின் நடத்தையில் திடீர் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. குழந்தைகளிடம் எந்தவித ஈடுபாடும் காட்டாமல் இருந்த அவர், அவர்களை ஒரு காப்பகத்தில் சேர்த்துவிட வேண்டும் என்று அடிக்கடி கூறி வந்துள்ளார். அவரது இந்த விசித்திரமான நடவடிக்கையைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். பரிசோதித்த மருத்துவர்கள், பிரசவத்திற்குப் பிந்தைய மன அழுத்தம் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாகவே உமா தேவி இவ்வாறு நடந்து கொள்வதாகத் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், செப்டம்பர் 1-ம் தேதி மதிய வேளையில் ராமலிங்கப்பா வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பியபோது, ஒரு அறை உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்தது. பலமுறை தட்டியும் திறக்காததால் கதவை வலுக்கட்டமாகத் திறந்து பார்த்தபோது, உமா தேவி துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. உடனடியாக அதிர்ச்சியடைந்த அவர், மனைவியைக் காப்பாற்றினார்.

ஆனால், அதே அறைக்குள் இருந்த நான்கு மாத இரட்டைக் குழந்தைகள் இருவரும் பரிதாபமாக இறந்து கிடந்தனர். அவர்களை அருகில் உள்ள  மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, குழந்தைகள் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேக தெரிவித்தனர்.

மனைவி உமா தேவியே தனது குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றதாகக் கணவர் ராமலிங்கப்பா அளித்த புகாரின் அடிப்படையில்  போலீசார்  வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.