தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள ஒரு அரசுப் பள்ளியில் நடந்துள்ள ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்வி கற்கும் இடமான பள்ளிக்கூடத்தில் சக மாணவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளதை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

குறித்த அரசுப் பள்ளியில் ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களில் 8-ம் வகுப்பு பயின்று வரும் ஒரு மாணவனை, அதே பள்ளியில் படிக்கும் சக மாணவர்கள் ஒன்பது பேர் கடந்த ஒரு வருடமாகத் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வந்துள்ளனர். இந்தத் கொடூரமான செயலை வெளியில் யாரிடமாவது சொன்னால், மேலும் பல கடுமையான துன்புறுத்தல்களைத் தருவோம் என்று அந்த மாணவனை அவர்கள் மிரட்டியுள்ளனர். இதனால் கடும் அச்சமடைந்த அந்தப் பிஞ்சு மாணவன், பயத்தின் காரணமாக யாரிடமும் தன் துயரத்தை வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் மனதிற்குள்ளேயே தவித்துப் புழுங்கியுள்ளான்.

இதன் காரணமாக அந்த மாணவனுக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. மகனின் உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்படுவதைக் கவனித்த பள்ளி ஆசிரியர், உடனடியாகப் பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோரை அழைத்து விபரத்தைக் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பள்ளியில் வைத்து மாணவனைத் தொடர்ந்து துன்புறுத்திய சக மாணவர்களின் பெற்றோர்களையும் வரவழைத்து ஆசிரியர்கள் தரப்பில் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தச் சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்த பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர், இது குறித்து காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில்  காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பாதிக்கப்பட்ட மாணவனை கடந்த ஆண்டிலிருந்தே அந்த 9 மாணவர்களும் திட்டமிட்டுத் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளது அம்பலமானது.

இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த 9 மாணவர்களையும் கைது செய்தனர். அதன்பிறகு, சட்டப்படி தூத்துக்குடியில் உள்ள சிறார் நீதிக்குழுமத்தில் அவர்களை ஆஜர்படுத்தி, நெல்லையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். பள்ளிக் கூடத்தில் சக மாணவர்களே பாலியல் தொல்லையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள இந்தச் சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.