தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவன் ஒருவனுக்குச் சக மாணவர்களே பாலியல் ரீதியான தொல்லைகளைக் கொடுத்து வந்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த கல்வித்துறையையும் அதிர வைத்துள்ளது. பள்ளியில் படித்து வந்த அந்தச் சிறுவனை கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாகச் சக மாணவர்கள் சிலரே குறிவைத்துத் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளனர். மேலும், இந்த விவகாரம் குறித்து வெளியே யாரிடமாவது கூறினால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர்கள் அச்சிறுவனைத் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர்.

சக மாணவர்களின் தொடர்ச்சியான இந்தச் சித்ரவதைகளாலும் அச்சுறுத்தல்களாலும் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மாணவனுக்குத் தொடர்ந்து உடல் நலக்குறைவும் ஏற்பட்டுள்ளது. மாணவனின் விநோதமான மாற்றத்தைக் கவனித்த ஆசிரியர் ஒருவர் அவனது பெற்றோரை அழைத்து விவரத்தைத் தெரிவிக்கவே, பெற்றோர் நடத்திய விசாரணையின் போது தன் மகனுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இதனைக் கண்டு பதைபதைத்துப் போன பெற்றோர் உடனடியாக விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளனர்.

பெற்றோரின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், மாணவனுக்குத் தொல்லை கொடுத்தது அதே பள்ளியைச் சேர்ந்த 9 மாணவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து போக்சோ சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா  சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சம்பந்தப்பட்ட 9 சிறுவர்களையும் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர்கள் சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டுத் திருநெல்வேலியில் உள்ள சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் , இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்கக் கல்வித்துறையும் உரிய ஆலோசனைகளை வழங்கி வருகிறது.