ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே இரண்டு வார கால தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, லெபனான் மீது இஸ்ரேலிய ராணுவம் (IDF) மிகக்கடுமையான வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. வெறும் 10 நிமிட இடைவெளியில் லெபனானின் 100-க்கும் மேற்பட்ட நிலைகளை இஸ்ரேல் தாக்கி அழித்துள்ளது.
லெபனான் சிவில் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தலைநகர் பெய்ரூட், பெக்கா பள்ளத்தாக்கு, மவுண்ட் லெபனான், சிடோன் மற்றும் தெற்கு லெபனானின் கிராமங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில் குறைந்தது 254 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 1,165 பேர் படுகாயமடைந்துள்ளனர். குடியிருப்புகள் நிறைந்த பகுதிகள் மீதும் குண்டுகள் வீசப்பட்டதால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.
இந்தத் தாக்குதல் குறித்துப் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “2024 நவம்பரில் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது நடத்தப்பட்ட பேஜர் (Pager) தாக்குதலை விட இது மிகப்பெரியது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மார்ச் 2-ஆம் தேதி தொடங்கப்பட்ட புதிய ராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக, லெபனானில் நடத்தப்பட்ட மிகப்பெரிய ஒருங்கிணைந்த தாக்குதல் இதுவென இஸ்ரேல் ராணுவம் உரிமை கோரியுள்ளது. ஆன்லைன் கூட்டங்களின் (Online Meeting) இருப்பிடங்களைக் கண்காணித்து, ஹிஸ்புல்லா உயர்மட்ட அதிகாரிகளை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது.
இஸ்ரேலின் இந்தச் செயலை லெபனான் நாடாளுமன்ற சபாநாயகர் நபீ பெர்ரி “முழுக்க முழுக்க ஒரு போர்க்குற்றம்” என்று சாடியுள்ளார். ஹிஸ்புல்லா அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், “இஸ்ரேல் ராணுவம் வேண்டுமென்றே பொதுமக்கள் வாழும் பகுதிகளைத் தாக்கியுள்ளது” எனக் கண்டனம் தெரிவித்துள்ளது.
தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தம் லெபனானுக்குப் பொருந்தாது எனத் தெளிவுபடுத்தியுள்ள நெதன்யாகு, “ஹிஸ்புல்லா மீதான எங்கள் தாக்குதல்கள் தொடரும். இஸ்ரேலின் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் உள்ளது. எந்த நேரத்திலும் ஈரானுடனான நேரடிப் போருக்குத் திரும்ப நாங்கள் தயாராகவே இருக்கிறோம்” என்று எச்சரித்துள்ளார்.
கடந்த 2024 செப்டம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் லெபனான் மற்றும் சிரியாவில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான பேஜர்கள் மற்றும் வாக்கி-டாக்கிகள் மர்மமான முறையில் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின. இதில் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். ஹிஸ்புல்லாவின் தகவல் தொடர்பு கட்டமைப்பைச் சிதைக்க இஸ்ரேல் உளவுத்துறை நடத்திய மிக ரகசியமான மற்றும் அதிநவீனத் தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
