பெங்களூரு நாயண்டஹள்ளி பகுதியில் ஒன்றரை வயது பெண் குழந்தை, வீட்டின் முதல் மாடியிலிருந்து தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அக்குழந்தை, தற்போது அபாய கட்டத்தைத் தாண்டியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதாவது நவீன் – புஷ்பா தம்பதியின் ஒன்றரை வயது மகள் சஹானா. நவீன் ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று, புஷ்பா சமையலறையில் பால் காய்ச்சிக் கொண்டிருந்தபோது, குழந்தை சஹானா விளையாடிக்கொண்டே வீட்டின் பிரதான கதவு வழியாக வெளியே வந்துள்ளார். அங்கு வைக்கப்பட்டிருந்த நாற்காலியில் ஏறி எட்டிப் பார்த்தபோது, எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி முதல் மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார். இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி பார்ப்பவர்களை உறைய வைத்துள்ளது.

குழந்தை கீழே விழுந்த சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த தாய் புஷ்பா, ரத்த வெள்ளத்தில் கிடந்த மகளைக் கண்டு நிலைகுலைந்து போனார். அதிர்ச்சியிலும், ரத்த அழுத்தம் குறைந்ததாலும் அவர் சாலையிலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குழந்தை மீட்கப்பட்டு, ரங்கடோர் மெமோரியல் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டது.

குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், மூன்று தையல்கள் போடப்பட்டன. தொடக்கத்தில் குழந்தையின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும், தீவிர சிகிச்சைக்குப் பிறகு குழந்தை தற்போது அபாய கட்டத்தைத் தாண்டி நலமாக இருப்பதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து தந்தை நவீன் கூறுகையில், “பால் பொங்கிவிடக்கூடாது என்பதற்காக அடுப்பைச் சிறிதாக்க எனது மனைவி சமையலறைக்குச் சென்ற சில நிமிடங்களில் இந்த விபத்து நடந்துவிட்டது. இது மூன்றாம் மாடியிலிருந்து நடந்த விபத்து என்று வதந்திகள் பரவின, ஆனால் உண்மையில் அது முதல் மாடிதான். எங்களின் ஒரே குழந்தை உயிருடன் திரும்பியது எங்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது” எனத் தெரிவித்தார்.