ஐபிஎல் 2026 கிரிக்கெட் போட்டியின் போது காயமடைந்த தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் லுங்கி என்கிடியை, டெல்லி போக்குவரத்து காவல்துறை துரிதமாகச் செயல்பட்டு 11 நிமிடங்களில் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்து உயிரைக் காப்பாற்றியுள்ளனர். அருண் ஜெட்லி மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது மிட்-ஆஃப் திசையில் வந்த ஒரு கேட்ச்சை பிடிக்க முயன்ற டெல்லி அணியின் பந்துவீச்சாளர் லுங்கி என்கிடி, எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார். இதில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. மைதானத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்ட போதிலும், காயத்தின் தீவிரம் காரணமாக அவர் உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றப்பட வேண்டிய சூழல் உருவானது.

மாலை 6:16 மணியளவில் ஆம்புலன்ஸ் மைதானத்திலிருந்து புறப்பட்டது. அந்தச் சமயம் டெல்லியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால், மருத்துவமனைக்குச் செல்ல வழக்கமாக 30 நிமிடங்களுக்கு மேலாகும். இதனால் டெல்லி போக்குவரத்து காவல்துறை உதவி ஆணையர் சஞ்சய் சிங் களத்தில் இறங்கினார்.

கூகுள் மேப் காட்டிய குறுகிய பாதைகள் நெரிசலில் சிக்கியிருந்ததால், அதனைத் தவிர்க்குமாறு ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு அவர் அறிவுறுத்தினார். சுமார் 60 போலீஸ் அதிகாரிகள் வயர்லெஸ் மூலம் ஒருங்கிணைக்கப்பட, ஒரு தற்காலிக ‘கிரீன் காரிடார்’ (Green Corridor) உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 10 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 11 நிமிடங்களில் கடந்து, மாலை 6:27 மணிக்கு ராஜேந்திர நகரில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு என்கிடி கொண்டு சேர்க்கப்பட்டார்.

ஏசிபி சஞ்சய் சிங் ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் விராட் கோலி மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோருடன் இணைந்து விளையாடிய அனுபவம் கொண்டவர். இது குறித்து அவர் கூறுகையில், நானும் ஒரு கிரிக்கெட் வீரர் என்பதால், மைதானத்தில் ஏற்படும் காயங்களின் தீவிரத்தை என்னால் உணர முடிந்தது. லுங்கி என்கிடி விழுந்த விதம் மிகவும் பயங்கரமாக இருந்தது. அவர் ஒரு சர்வதேச வீரர், அவருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வது எங்களது கடமை எனத் தெரிவித்தார்.

மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட என்கிடிக்கு ஸ்கேன் பரிசோதனைகள் செய்யப்பட்டன. தற்போது அவரது நிலை சீராக உள்ளதால் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இது குறித்து என்கிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி, நான் நலமாக உள்ளேன்,” எனப் பதிவிட்டுள்ளார். அவர் அடுத்த போட்டியில் விளையாடுவாரா என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. மேலும் காவல்துறையினரின் இந்தச் சமயோசிதச் செயலை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.