நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தடுமாறி வரும் நிலையில், அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி மீண்டும் விளையாடுவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், தனது யூடியூப் பக்கத்தில் தோனியின் வருகை குறித்து ஒரு சுவாரசியமான கருத்தைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது,

சிஎஸ்கே அணி பிளே-ஆஃப் வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டால் மட்டுமே தோனி மீண்டும் விளையாட வாய்ப்புள்ளது. அணி இன்னும் பந்தயத்தில் இருக்கும்போது, காயத்தோடு இருக்கும் அவரை களம் இறக்கி நிர்வாகம் ரிஸ்க் எடுக்க விரும்பாது. தற்போது சிஎஸ்கே-வின் பந்துவீச்சு சிறப்பாக உள்ளது. பேட்டிங்கும் கைகொடுத்தால் அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்று பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது.

தொடர் ஆரம்பமானது முதல் தோனி கணுக்கால் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் அவர் திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அவர் விளையாடவில்லை. அவருக்கு மீண்டும் ஒரு புதிய காயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், தோனி விளையாடாததற்குப் பின்னால் வேறு ஏதேனும் ரகசிய காரணங்கள் இருக்குமோ என்று கிரிக்கெட் வல்லுநர்கள் சந்தேகிக்கின்றனர்.

இது குறித்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறுகையில்: “கணுக்கால் காயம் என்பது மிகவும் சிக்கலானது. அவரை அவசரமாகக் களம் இறக்கி, காயம் மீண்டும் தீவிரமானால் இந்த சீசன் முழுவதுமே அவர் விளையாட முடியாமல் போகும். தற்போது அவர் பிசியோதெரபிஸ்டுடன் இணைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் முழுத் தகுதியுடன் இருப்பதாகக் கூறும்போது மட்டுமே அவர் அணியில் சேர்க்கப்படுவார். அவர் குணமடைந்து வருகிறார் என்பதை மட்டும் என்னால் உறுதிபடக் கூற முடியும்” என்றார்.

தற்போது விளையாடியுள்ள 8 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் சிஎஸ்கே தடுமாறி வருகிறது. மீதமுள்ள 6 போட்டிகளில் குறைந்தது 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆஃப் வாய்ப்பைத் தக்கவைக்க முடியும். அடுத்ததாக மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதவுள்ள நிலையில், அந்தப் போட்டியில் வெற்றி பெறுவது சிஎஸ்கே-விற்கு வாழ்வா-சாவா போராட்டமாக இருக்கும்.

கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஃபார்முக்கு திரும்பியுள்ளது அணிக்குக் கூடுதல் பலத்தைத் தந்துள்ள நிலையில், ‘தலா’ தோனி மஞ்சள் சீருடையில் மீண்டும் களத்திற்கு வருவாரா என்பதை காலம் தான் பதில் சொல்லும்.