தற்போதுள்ள கார்ப்பரேட் உலகில் லீவ் எடுப்பது என்பதே ஒரு பெரிய போராட்டமாக மாறிவிட்டது. இந்நிலையில், ரெடிட் (Reddit) சமூக வலைதளத்தில் ஊழியர் ஒருவர் பகிர்ந்துள்ள வாட்ஸ்அப் உரையாடல் நெட்டிசன்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளது.
அந்த ஊழியருக்குக் கடுமையான தலைவலி இருந்ததால், அவர் தனது மேலாளரிடம் ஒரு நாள் விடுப்பு கேட்டுள்ளார். அதற்கு அந்த மேலாளர், “எச்ஆர் (HR) பிரிவிடம் பேசுங்கள்” எனக் கூறியுள்ளார். எச்ஆர் தரப்பிலோ முறையான மருத்துவச் சான்றிதழ்களைக் கேட்டுள்ளனர்.

ஊழியர் எச்ஆர் சொன்னதைத் தனது மேலாளரிடம் தெரிவித்துள்ளார். அப்போது அந்த மேலாளர், “எச்ஆர் உத்தரவுப்படி, நீங்கள் இப்போது எங்கே இருக்கிறீர்கள் என்பதை உறுதி செய்ய உங்கள் லைவ் லொகேஷனை உடனடியாகப் பகிர வேண்டும்” என்று மெசேஜ் செய்துள்ளார்.
ஊழியர் நிஜமாகவே வீட்டில் தான் ஓய்வெடுக்கிறாரா அல்லது வெளியில் எங்காவது பார்ட்டி செய்கிறாரா என்பதை வேவு பார்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்தச் சம்பவத்தைப் பார்த்த நெட்டிசன்கள் அந்த நிறுவனத்தைக் கடுமையாகச் சாடி வருகின்றனர்:
“ஊழியர்கள் என்ன ஜெயில் கைதிகளா? லொகேஷன் கேட்பது அவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பறிக்கும் செயல்” என ஒரு பயனர் பதிவிட்டுள்ளார்.
“அடுத்தமுறை காய்ச்சல் என்றால் மருத்துவமனை பெட்டில் இருக்கும் வீடியோவைக் கேட்பார்களோ?” எனப் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.
“நிறுவனங்களில் நிலவும் இந்த ‘நம்பிக்கையின்மை’ தான் ஊழியர்களை அதிக மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது” எனச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
