தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், தனது அதிரடி சரவெடியை மதுவிலக்கு விவகாரத்தில் இருந்து தொடங்கப்போவதாக வெளியாகியுள்ள தகவல் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, பொதுமக்கள் நீண்டகாலமாக முன்வைத்து வரும் கோரிக்கையை ஏற்று, தமிழகத்தில் உள்ள கோவில்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள (சுமார் 200 முதல் 500)  டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான முதற்கட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அவர் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“மதுவால் சீரழியும் இளைய தலைமுறையைக் காப்பதே எனது முதல் கடமை” என்று தேர்தல் பிரசாரத்தில் முழங்கிய விஜய், பதவிக்கு வந்த சில மணி நேரங்களிலேயே குடிமகன்களுக்கு ‘ஷாக்’ கொடுக்கும் வகையில் இத்தகைய அதிரடி நடவடிக்கையில் இறங்கியிருப்பது, பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.