தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிந்து புதிய உறுப்பினர்கள் பதவியேற்றுள்ள நிலையில், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தமிழக சட்டப்பேரவைக்குத் தேர்வாகியுள்ள 234 எம்.எல்.ஏ-க்களில், சுமார் 126 பேர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அந்த அறிக்கை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதில் ஆளுங்கட்சியான தவெக, 41 எம்.எல்.ஏ-க்களுடன் முதலிடத்தில் இருப்பது பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.

​குறிப்பாக, தவெக கட்சியைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏ-க்கள் மீது மிகவும் தீவிரமான குற்ற வழக்குகள் இருப்பதாக ஏ.டி.ஆர் தெரிவித்துள்ளது. இப்பட்டியலில் திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த தலா 14 எம்.எல்.ஏ-க்களும், காங்கிரஸ் மற்றும் பாமகவைச் சேர்ந்த தலா 2 எம்.எல்.ஏ-க்களும் இடம்பெற்றுள்ளனர். “மாற்று அரசியல்” என்று பேசி ஆட்சியைப் பிடித்த தவெக கட்சியிலேயே அதிகப்படியான குற்றப் பின்னணி கொண்டவர்கள் இருப்பது, எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வதற்குப் பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த அறிக்கை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.