தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, இன்று கூடிய முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் புதிய எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்கும் நிகழ்வு நடைபெற்றது. முதல்வர் விஜய் தொடங்கி வைக்க, வரிசையாக மற்ற உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர். ஆனால், மொத்தமுள்ள 234 பேரில் 232 பேர் மட்டுமே இன்று பதவியேற்றுள்ளனர். அதிமுக-வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.வி.சண்முகம், பதவியேற்பு நிகழ்வு முடியும் முன்பே அவையில் இருந்து பாதியிலேயே கிளம்பிச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

​அதிமுக-வுக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசலே இதற்கு முக்கியக் காரணம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இன்று காலையிலேயே அதிமுக எம்.எல்.ஏ-க்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து சட்டசபைக்கு வந்தது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், சி.வி.சண்முகத்தின் இந்தச் செயல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தலைமைக்கு அவர் அளிக்கும் நெருக்கடியாகவே பார்க்கப்படுகிறது. நாளை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவர் நாளை பதவியேற்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.