மத்திய கிழக்கில் நீடித்து வரும் ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் காரணமாக, உலக நாடுகள் மீண்டும் ஒருமுறை ‘லாக்டவுன்’ (Lockdown) நிலைக்குத் தள்ளப்படுமா என்ற அச்சம் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
சர்வதேச எரிசக்தி முகமை (IEA) வெளியிட்டுள்ள ‘எண்ணெய் அதிர்ச்சிகளிலிருந்து பாதுகாத்தல்’ என்ற 10 அம்சப் பரிந்துரை அறிக்கை, சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. எரிபொருள் பற்றாக்குறையைச் சமாளிக்க வாரத்திற்கு 3 நாட்கள் வீட்டிலிருந்து வேலை (Work From Home), நெடுஞ்சாலைகளில் வாகன வேகத்தைக் குறைத்தல் மற்றும் பொதுப் போக்குவரத்தை அதிகப்படுத்துதல் போன்ற பரிந்துரைகளை ஐஇஏ வழங்கியுள்ளது.
இது கடந்த கால கோவிட் காலத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை நினைவுபடுத்துவதால், “லாக்டவுன் 2.0-விற்கு நாங்கள் தயாராக இல்லை” எனப் பொதுமக்கள் இணையத்தில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள அழுத்தமே இந்த அதிரடிப் பரிந்துரைகளுக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக, தனியார் வாகனப் பயன்பாட்டைக் குறைத்து எரிபொருள் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க உலக நாடுகளுக்கு ஐஇஏ அவசரகால ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
இருப்பினும், இந்தியாவைப் பொறுத்தவரை தற்போதைக்கு எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் இல்லை என்றும், போதுமான கையிருப்பு உள்ளதாகவும் மத்திய அரசு திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளது. ஆனாலும், போர் நீடிக்கும் பட்சத்தில் விமானப் பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் கார் பகிர்வு (Car Sharing) போன்ற நடவடிக்கைகள் கட்டாயமாக்கப்படலாம் என்ற யூகங்கள் உலகளாவிய சந்தையில் ஒருவித பதற்றத்தைத் தக்கவைத்துள்ளன.
