அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான போர் ஒருபுறம் தீவிரமடைந்து வந்தாலும், மறுபுறம் எண்ணெய் விற்பனை மூலம் ஈரான் தனது பொருளாதாரத்தை அசுர வேகத்தில் வலுப்படுத்தி வருவது சர்வதேச அரங்கில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ப்ளூம்பெர்க் (Bloomberg) வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையின்படி, உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையான ‘ஹார்முஸ் ஜலசந்தி’  தற்போது ஈரானின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது. உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதத்திற்கும் அதிகமான பங்கு வகிக்கும் இந்தப் பாதையை மற்ற வளைகுடா நாடுகள் பயன்படுத்த ஈரான் முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இதனால், தற்போது ஈரான் மட்டுமே இந்தப் பாதை வழியாக தடையின்றி எண்ணெய் ஏற்றுமதி செய்யும் ஒரே நாடாக மாறியுள்ளது.

இந்நிலையில் ஈரானின் இந்தத் திடீர் பொருளாதார வளர்ச்சிக்கு இரண்டு முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. போர் தொடங்கிய பிறகு சர்வதேச சந்தையில் ‘பிரெண்ட்’ ரக கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரல் 100 டாலரைத் தாண்டியுள்ளது. முன்னதாக சீனா போன்ற நாடுகளுக்கு அதிக தள்ளுபடி விலையில் எண்ணெய் வழங்கி வந்த ஈரான், தற்போது கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவிற்கு மிகக் குறைந்த தள்ளுபடி விலையிலேயே எண்ணெயை விற்பனை செய்கிறது.

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி தற்போது நாளொன்றுக்கு 16 லட்சம் பேரல்கள் என்ற இலக்கை எட்டியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நாள் ஒன்றுக்கு 115 மில்லியன் டாலராக இருந்த ஈரானின் வருமானம், மார்ச் மாதத்தில் 139 மில்லியன் டாலராக (இந்திய மதிப்பில் சுமார் 1,160 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. ஈரானின் ‘கார்க்’ தீவு முனையத்திலிருந்து எண்ணெய் ஏற்றிய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத் தொடர்ந்து வெளியேறி வருகின்றன.

ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தினாலும், அதன் பொருளாதார நரம்பான எண்ணெய் விற்பனையைத் தடுக்க அமெரிக்கா தவறிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ரிச்சர்ட் நேப்யு கூறுகையில், “டிரம்ப் நிர்வாகம் ஈரானிடம் எண்ணெய் விற்பனை செய்யக் கெஞ்சுவது போல் தெரிகிறது. இதைத் தடுப்பதே அமெரிக்காவின் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று நான் கருதினேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் கடலில் ஏற்கனவே பயணித்துக் கொண்டிருக்கும் ஈரானிய எண்ணெய் டாங்கர்கள் மீதான தடைகளை அமெரிக்க அரசு தற்காலிகமாக நீக்கியுள்ளது ஈரானுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. இந்தப் பண வரத்து ஈரானின் போர்ச் செலவுகளுக்கும், பொருளாதாரத்தை மறுசீரமைக்கவும் பெரும் உதவியாக அமைந்துவிட்டது.