நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரில் நிலவும் கடும் குளிர் காரணமாக, அங்குள்ள சாலைகள் அனைத்தும் பனிப்படலமாக மாறி, பார்ப்பதற்கு ‘ஐஸ் ரிங்க்’ போலவே காட்சியளிக்கின்றன. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், பாதசாரிகள் வழுக்கும் சாலைகளில் நடக்க முடியாமல் தடுமாறுவதும், மிதிவண்டி ஓட்டுபவர்கள் நிலைதடுமாறி விழுவதும், வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து சறுக்குவதும் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மக்கள் எப்படியாவது தங்களை நிலைநிறுத்திக்கொள்ள முயன்று பென்குயின்களைப் போல மெதுவாக நடப்பதும், இறுதியில் சறுக்கி விழுவதும் பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும், குளிர்காலத்தின் ஆபத்தான சூழலை வெளிப்படுத்துவதாக உள்ளது. இந்த வீடியோவை இதுவரை 1.2 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ள நிலையில், இணையவாசிகள் பலரும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். “பனியில் நடக்க மனிதர்கள் எடுக்கும் முயற்சிகளை விட வேடிக்கையானது வேறொன்றும் இல்லை” எனச் சிலர் கிண்டல் செய்துள்ளனர்.
⛸️Amsterdam has turned into one giant ice rink
Moving around the streets normally has become almost impossible. pic.twitter.com/lU36fIeVbk
— NEXTA (@nexta_tv) January 11, 2026
“>
மேலும், சாலைகளில் பனியை உருக்க உப்பு அல்லது பிடிமானத்திற்காக மணலைத் தூவலாம் என்றும் பலர் ஆலோசனை வழங்கி வருகின்றனர். கடல் மட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள ஆம்ஸ்டர்டாம் நகரில், காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், வெப்பநிலை திடீரென குறையும்போது மழை அல்லது உருகிய பனி உடனடியாக உறைந்து, ‘பிளாக் ஐஸ்’ எனப்படும் கண்ணுக்குத் தெரியாத ஆபத்தான பனிப் படலத்தை உருவாக்குவது குறிப்பிடத்தக்கது.
