வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, சுமார் 37,000 கோடி ரூபாய் மதிப்பிலான கச்சா எண்ணெய் அமெரிக்காவிற்கு வரவிருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோர் போதைப்பொருள் கடத்தல் புகாரில் அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் தற்காலிக அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் பொறுப்பேற்றுள்ளார்.

இந்த அதிரடி மாற்றங்கள் அமெரிக்காவின் அழுத்தத்தினால் ஏற்பட்டதாகக் கருதப்படும் நிலையில், வெனிசுலா தற்போது அமெரிக்காவுடன் இணைந்து சுமூகமாகச் செயல்பட்டு வருவதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். வெனிசுலாவின் தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் தன்னிடம் ஆலோசித்தபோது, தங்களது வசம் உள்ள 5 கோடி பீப்பாய்கள் கச்சா எண்ணெயை அமெரிக்கா எடுத்துக்கொள்ள முடியுமா என்று கேட்டதாகவும், அதற்கு தாம் சம்மதம் தெரிவித்ததாகவும் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதன் மூலம் பல கோடி மதிப்புள்ள எரிபொருள் வளம் அமெரிக்காவிற்கு வரத்தொடங்கியுள்ளது. வெனிசுலாவின் இயற்கை வளங்கள் டிரம்ப் நிர்வாகத்தின் மிரட்டலுக்குப் பணிந்து அமெரிக்காவிற்குத் தாரைவார்க்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தாலும், அந்நாட்டின் புதிய தலைமையுடன் மிகச் சிறந்த முறையில் உறவு நீடிப்பதாக டிரம்ப் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.