“இறுதி ஊர்வலம் என்ற பெயரில் பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிப்பதையும், பொதுமக்களுக்கு இடையூறு செய்வதையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு மிகக் கடுமையான கருத்தைப் பதிவு செய்துள்ளது. மதுரை ஆலங்குளம் பகுதியில் நடந்த இறுதி ஊர்வலத்தின் போது, கல்லூரி பேருந்து ஒன்றைத் தாக்கிச் சேதப்படுத்திய வழக்கில் முன்ஜாமீன் கோரி விண்ணப்பித்த 3 நபர்களுக்கு ஜாமீன் வழங்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். வன்முறையில் ஈடுபடுபவர்களுக்குச் சட்டம் ஒருபோதும் துணை நிற்காது என்பதை இந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், தமிழகத்தில் இறுதி ஊர்வலங்களை முறைப்படுத்தவும், வன்முறைகளைத் தவிர்க்கவும் ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வர வேண்டிய அவசியம் இருப்பதாகவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இது தொடர்பாகத் தமிழக அரசு உரிய ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சாவு ஊர்வலங்களில் ஆட்டம் பாட்டம் என்ற பெயரில் அத்துமீறும் கும்பல்களுக்குச் செக் வைக்கும் விதமாக நீதிமன்றம் எடுத்துள்ள இந்த முடிவு சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
