மனிதர்களின் தாராள மனப்பான்மை, இரக்கம் மற்றும் அந்நியருக்கு உதவிக்கரத்தை நீட்டும் மனநிலையை ஆராயும் சமூக பரிசோதனையின் ஒரு பகுதியாக, இந்திய இளைஞர் நோவா அமெரிக்காவின் வீதிகளில் இறங்கி நடத்திய முயற்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நோவா, சாலையில் நடந்து செல்லும் வழிப்போக்கர்களை அணுகி, தண்ணீர் வாங்க ஒரு அல்லது இரண்டு டாலர்கள் உதவ முடியுமா என கேட்டார். இதன் மூலம், அந்நியரிடம் உதவி கேட்டபோது மக்கள் எவ்வாறு பதிலளிக்கிறார்கள் என்பதை அறிய முயன்றார்.

வீடியோவில், ஒரு நபரை நோவா அணுகி, “எனக்கு தாகமாக உள்ளது… கொஞ்சம் தண்ணீர் வாங்க ஒரு டாலர் கிடைக்குமா?” என கேட்டார். எந்த தயக்கமும் இல்லாமல் அந்த நபர் உடனே பணம் எடுத்துக் கொடுத்து உதவினார்.  பின்னர், நோவா இது ஒரு சமூக பரிசோதனை என்று வெளிப்படுத்த, அந்த நபர் மேலும் மகிழ்ந்து அவருடன் மிட்டாய்களைப் பகிர்ந்து கொண்டார். இந்த காட்சி பலரது மனத்தையும் கவர்ந்துள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Noah (@flexnoahh)

இந்த வீடியோவை வெளியிட்ட நோவா, “ஒரு டாலருக்கு என்ன கிடைக்கும்?” என்ற வாசகத்துடன் பதிவிட்டுள்ளார். வீடியோவுக்குக் கீழ் பலரும் கருத்துகள் எழுதியுள்ளனர். “இதற்காகவா நீங்கள் அமெரிக்கா சென்றீர்கள்?” என்ற கேள்விக்கு நோவா, “உண்மையைச் சொன்னால் எனது குறிக்கோள் முதுகலைப் பட்டப்படிப்பை முடிப்பதே. ஆனால், மற்றவர்களுக்கு உதவ கடவுள் எனக்கு பலத்தைக் கொடுத்துள்ளார்” என பதிலளித்தார்.

மற்றொரு பயனர், “அந்த நபருக்கே பணம் கொடுங்கள்” என கூற, இன்னொருவர் “இத்தனை இரக்கத்துக்கு பரிசா வெறும் மிட்டாய்களா?” என்று சோகத்துடன் குறிப்பிட்டார். இந்த சமூக பரிசோதனையின் மூலம், அந்நியரின் கருணை மற்றும் மனிதநேயத்தின் உண்மையான முகம் மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டதாக நெட்டிசன்கள் பாராட்டுகின்றனர்.