நகரும் மெட்ரோ ரயிலில் பயணித்த ஒருவர் மீது கைவிலங்கு போட்டு, பின்னர் சாவியை எடுத்துக்கொண்டு தப்பிச் செல்வது தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த குறும்பு வீடியோவைப் பதிவேற்றியவரை போலீசார் கைது செய்ய வேண்டும் என்று கோருகின்றனர்.
இந்த வீடியோவை பகிர்ந்தவர் துருக்கிய சமூக வலைத்தள உள்ளடக்க உருவாக்குநரான எம்ரே நல்காகர். அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கான @emrenalcakarr மூலம் அக்டோபர் மாதத்தில் இந்த வீடியோவை பதிவேற்றியுள்ளார். சில வினாடிகள் மட்டுமே நீடிக்கும் அந்த வீடியோவில், மெட்ரோவில் பயணித்த ஒருவர் அருகே சென்ற எம்ரே, திடீரென அவரது கை மணிக்கட்டில் கைவிலங்கு போட்டு ரயிலின் கம்பியில் பூட்டுவதைப் போல நடிக்கிறார்.
View this post on Instagram
பின்னர், கைவிலங்கு சாவியை கையில் ஏந்தியபடி ரயிலிலிருந்து சிரித்தபடி வெளியேறுவதை வீடியோ காட்டுகிறது. பயணி அதிர்ச்சியடைந்து என்ன செய்யலாம் என்று தெரியாமல் நிற்கும் காட்சி பலரின் கோபத்தை தூண்டியுள்ளது. இந்த குறும்பு வீடியோ இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 2 கோடி பார்வைகளை பெற்றுள்ளது. சமூக ஊடகங்களில் பலர், “இது குறும்பு அல்ல, நேரடி குற்றம்”,
“இப்படி பொறுப்பற்ற வீடியோக்கள் சமூகத்தில் தவறான செய்தி கொடுக்கின்றன”, “லைக்குகள், பார்வைகள் கிடைக்க மக்கள் எதையும் செய்து விடுகிறார்கள்” என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
மேலும் சில பயனர்கள், இந்த சம்பவத்துக்கு எம்ரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், பொது இடங்களில் இத்தகைய ஆபத்தான குறும்பு வீடியோக்கள் பதிவேற்றப்படுவது தடுக்கப்பட வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
