தர்மபுரி அருகே செல்போனில் வீடியோ பார்த்ததைக் கண்டித்ததால், பத்தாம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பச்சனம்பட்டியைச் சேர்ந்தவர் தாமோதரன், கட்டிட மேஸ்திரி. இவரது மகள் பிரதீபா (15),  அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

சம்பவத்தன்று, பிரதீபா தனது தாயாரின் செல்போனை வாங்கி அதில் வீடியோக்களைப் பார்த்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கவனித்த அவரது தாயார், “படிக்காமல் ஏன் நேரத்தை வீணடிக்கிறாய்?” என்று கண்டித்துள்ளார்.

தாயார் கண்டித்ததால் ஆத்திரமடைந்த பிரதீபா, “நான் படிக்கப் போகிறேன்” என்று கோபமாகக் கூறிவிட்டு தனது அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், கதவைத் தட்டியுள்ளனர். உள்ளே பதில் ஏதும் வராததால், ஜன்னல் வழியாகப் பார்த்தபோது பிரதீபா தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாகக் கதவை உடைத்து உள்ளே சென்ற உறவினர்கள், உயிருக்குப்போராடிய பிரதீபாவை மீட்டு தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரதீபா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இச்சம்பவம் குறித்து தர்மபுரி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.