நீலகிரி மாவட்டம் ஊட்டியில், பெற்ற மகளுக்கே தந்தை பாலியல் தொல்லை கொடுத்த சம்பவமும், அதன் காரணமாக மாணவி தற்கொலைக்கு முயன்றதும் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஊட்டி பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் 12-ஆம் வகுப்பும், இளைய மகள் 9-ஆம் வகுப்பும் பயின்று வருகின்றனர். குடும்பப் பிரச்சினை காரணமாக இவர்களது தாய் பல ஆண்டுகளுக்கு முன்பே கணவரைப் பிரிந்து சென்றுவிட்டார். இதனால், இரண்டு பெண் குழந்தைகளும் தந்தையின் பராமரிப்பிலேயே வளர்ந்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக 9-ஆம் வகுப்பு படித்து வரும் இளைய மகளுக்கு அவரது தந்தை பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. தந்தை என்பதால் யாரிடமும் சொல்ல முடியாமல் அந்தச் சிறுமி மனவேதனையில் தவித்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று, தந்தை மதுபோதையில் வீட்டிற்கு வந்து மீண்டும் அந்த மாணவிக்கு பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் அளித்துள்ளார். இதனால் கடும் அதிர்ச்சியும் மன உளைச்சலும் அடைந்த மாணவி, வீட்டில் இருந்த விஷத்தை எடுத்துக் கொண்டு பள்ளிக்குக் கிளம்பியுள்ளார்.

பள்ளிக்குச் செல்லும் வழியில் விஷத்தைக் குடித்த மாணவி, வகுப்பறைக்குச் சென்ற சிறிது நேரத்திலேயே சக மாணவிகளின் கண்முன்னே மயங்கி விழுந்தார். ஆசிரியர்கள் அவரை மீட்க முயன்றபோது, தனது தந்தை செய்த கொடுமைகளை அழுதுகொண்டே விவரித்துள்ளார்.

உடனடியாகப் பள்ளி நிர்வாகம் குழந்தைகள் நலத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தது. முதற்கட்டமாக ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவியின் நிலைமை கவலைக்கிடமானதால், மேல் சிகிச்சைக்காக வேறு   மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகி ச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து ஊட்டி மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அந்தத் தந்தையைத் தேடி வரும் போலீசார், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய தந்தையே இத்தகைய செயலில் ஈடுபட்டது நீலகிரி மாவட்ட மக்களிடையே பலத்த கண்டனங்களை எழுப்பியுள்ளது.